செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை

செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை
பிப்ரவரி 08,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

Front page news and headlines today
செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோவில் பிரச்னையில் தமிழக அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள புராதன நகரங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியும் ஒன்று. 13ம் நூற்றாண்டில் தமிழ் மன்னர்கள் இங்கு கட்டத் துவங்கிய கோட்டையை விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பலம் பொருந்திய கோட்டையாக கட்டினர். ஒரு ராஜ்ஜியத்தின் தலைமையிடமாக விளங்கிய செஞ்சிக் கோட்டையை சுற்றி பல கோவில்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாசாரத்தை விளக்கும் நகரங்களில் ஒன்றாக 18ம் நூற்றாண்டு வரை வெகு சிறப்போடு செஞ்சி விளங்கியது. இந்து மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு செஞ்சிக்கு சரிவு ஏற்படத் துவங்கியது.தெய்வ வழிபாட்டின் மூலம் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும், கலையையும் வளர்க்க முன்னோர் உருவாக்கிய கலைப் பொக்கிஷமாக விளங்கிய கோவில்கள், சிலைகள் சீரழிக்கப்பட்டன. விலைமதிப்பு மிக்க பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. இப்போது பல கோவில்கள், சுவாமி சிலைகள் இல்லாத வெற்றிடமாக காட்சி தருகின்றன.

இது போன்ற கோவில்களில் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலும் ஒன்று. நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் வழிபாடு நின்றிருந்த காலத்திலும், சிங்கவரம் அரங்கநாதர், பீரங்கி மேடு ஏகாம்பரேஸ்வரர் கலந்து கொண்ட மாசி மக தீர்த்தவாரி தடையின்றி நடந்தது.ஏகாம்பரேஸ்வரர், கோதண்டராமர் கோவில் உள்ளே படித்துறை வழியாக சென்று சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், ஆற்றின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி தருவார்.சிங்கவரம் ரங்கநாதர் சுவாமி, திண்டிவனம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வழியாக சங்கராபரணி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நடக்கும். பின், பாலத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.

இதன் பிறகு, கோதண்டராமர் கோவிலில் வழிபாட்டை ஏற்படுத்த அறக்கட்டளை துவக்கி பஜனை, யாகம், பாகவத சொற்பொழிவுகள் நடத்தினர். பின், சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி கோவில் இடத்தில் அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத நபர், தனது டிராக்டரில் பொருத்திய புதிய ஏர் கலப்பையை சரிபார்க்க கோவில் அருகில் இருந்த இடத்தை உழுதார்.இதன் பிறகே பிரச்னை உருவாகி டிச., 7ம் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், போலீசில் புகார் செய்தார். மதம் சம்பந்தமான பிரச்னை என்பதால் போலீசார் பிரச்னையை தாசில்தார் சங்கரனுக்கு பரிந்துரைத்தனர். பிறகு டிச., 16ம் தேதி முதல் சமாதான கூட்டம் திண்டிவனம் சப் -கலெக்டர் மஞ்சுளா தலைமையில் நடந்தது.

கோதண்டராமர் கோவில் உள்ள சர்வே எண் 67-1 உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை கடந்த 1878ம் ஆண்டு விழுப்புரம் தாலுகா மயிலம் தேவஸ்தான ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா சிவாக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து, திண்டிவனம் தாலுகா செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு எப். டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியதாக பத்திரத்தை, கிறிஸ்தவர்கள் தாக்கல் செய்தனர்.இந்துக்கள் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டதால் ஜன., 20ம் தேதிக்கு கூட்டத்தை தள்ளி வைத்தனர். அதுவரையில் இரு தரப்பினரும் பிரச்னைக்குரிய இடத்திற்கு செல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த மாற்றமும், மாறுதலும் செய்யாமல் இருக்க தீர்மானம் நிறைவேற்றினர்.

பின், ஜன., 20ல் கூடிய கூட்டத்தில் இரு தரப்பிலும் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்வது, பிப்., 1ம் தேதி கோவில் இடத்தை இருதரப்பினர் முன்னிலையில் சர்வேயர்களை கொண்டு அளப்பது. பின், பிப்., 3ம் தேதி மீண்டும் சமாதானக் கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.இதன்படி கடந்த 1ம் தேதி கோவில் இடத்தை அளப்பதை கண்காணிக்க அதிகாரிகள் வருவதற்கு முன், பங்கு தந்தை ஜோசப் ஆல்பர்ட், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் ஆசிரியர் செல்வராஜ், பிரச்னைக்குரிய இடத்திற்கு வந்தனர்.அப்போது கோவிலில் அர்ச்சகர் சரவணன், பூஜைகளை செய்து கொண்டிருந்தார். பூஜையை நிறுத்தி கோவிலை பூட்டுமாறு ஜோசப் ஆல்பர்ட்டும், செல்வராஜூம் கூறியதால் பதட்டம் ஏற்பட்டது. அங்கு வந்த தாசில்தார் சங்கரன், கோவிலை பூட்டி சாவியை வாங்கினார்.

இதன் பிறகு இந்துக்கள் தரப்பில் பதட்டம் ஏற்பட்டது. அதுவரை நடந்த சமாதான கூட்டத்தில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில், 3ம் தேதி நடந்த மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் காஞ்சி கண்ணன், மாவட்ட பொதுச் செயலர் நேரு ஆகியோரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் புதுச்சேரி மாவட்ட சொத்து பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அருட்தந்தை அருள்புஷ்பம் வந்தனர்.இரு தரப்பிலும் பலர், தாசில்தார் அலுவலகம் முன் திரண்டதால், விழுப்புரத்தில் இருந்து அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

வெளியூரில் இருந்து வந்தவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தினால் சிக்கலாகி விடும் என கருதிய போலீசார், மூன்று கட்டமாக கூட்டத்தை நடத்த சப்- கலெக்டர் மஞ்சுளாவிடம் கேட்டனர்.இதனால், முதலில் இந்துக்களை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி கருத்து கேட்டனர். அடுத்து கிறிஸ்தவர்களிடம் கருத்து கேட்டனர். மூன்றாவதாக நடந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூர் நபர்களை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.இந்துக்கள் தரப்பில் எட்டு பேரும், கிறிஸ்தவர்கள் தரப்பில் ஒன்பது பேரும் கலந்து கொண்டனர். இந்துக்களுக்கு இடம் ஒதுக்குவது சம்பந்தமாக, பேராயரை கேட்டு முடிவு தெரிவிப்பதாக கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டு 15ம் தேதிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதுவரை கோவிலில் வழிபாடு நடத்தாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட செயலர் சிவசுப்ரமணி, கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜதாசர், கணேசன், பழனி, தமிழ்ச்செல்வி வெளிநடப்பு செய்தனர். கோபிநாத், அரங்க ஏழுலை, ஏழுமலை தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில், காஞ்சி கண்ணன் தலைமையில் இந்துக்கள், கோவிலில் வழிபாடு நடத்தச் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், கோவிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு கலைந்து சென்றனர்.கோதண்டராமர் கோவிலை பூட்டியதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.

சப் – கலெக்டர் மஞ்சுளா தலைமையில் கூட்டம் நடத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தரப்பில் இதுவரை பதில் இல்லை.இந்த பிரச்னையில் அடுத்த கட்டமாக, இந்து அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்று செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவில் வழிபாட்டுக் குழு உறுப்பினர் லோகஜெயராமன், சிங்கவரம் ரங்கநாதர் கோவில் தேர் திருப்பணிக் குழு உறுப்பினர் ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரச்னைக்கான காரணம்:இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருந்த செஞ்சியில் இப்போதைய பிரச்னைக்கு இப்பகுதி விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருவதே முக்கிய காரணம்.பிரச்னைக்குரிய இடத்தை ஒட்டிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாய்க்கு விலை போகிறது. பிரச்னைக்குரிய இடத்தின் மதிப்பு மூன்று கோடிக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பிலும் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த இடத்தில் இந்து கோவில் உள்ளது என்பதற்கு கோபுரங்களும், மண்டபங்களும் மறுக்க முடியாத சாட்சி. இந்த இடம் தாங்கள் கிரயம் பெற்றது என கிறிஸ்தவர்கள் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். எனவே, இந்த இடத்தை இரு தரப்பினரும் இழக்க தயாராக இல்லை.இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதமான தீர்க்கமான, முடிவான திட்டத்தை தமிழக அரசு எடுக்க வேண்டும். இப்பிரச்னையை தொடரச் செய்வதும்; காலம் கடத்துவதும் செஞ்சி பகுதியின் அமைதி கெடுவதற்கு வழி வகுக்கும்.

சமாதான கூட்டத்தில் நடந்தது என்ன?செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்னை கூறித்து மூன்று கட்டமாக சமாதானக் கூட்டம் நடந்தது. முதல் கூட்டத்தில் இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் காஞ்சி கண்ணன் பேசுகையில், இந்து கோவில் என்பதற்கு மண்டபங்கள், ராஜகோபுரம், கருவறையே சாட்சி. இந்து கோவில்கள் இந்துக்களுக்கு சொந்தமானது. இதை வாங்கியதும், விற்பனை செய்ததும் செல்லாது. கோவிலை பூட்டியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கோவில் இடத்திற்கான அரசு ஆவணங்களை முறைகேடாக திருத்தி உள்ளனர். இதை ஆய்வு செய்து திருத்தியவர்கள் மீது தேசிய ஒழுங்கு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்தின் மூலப்பத்திரம், டிரஸ்டி பத்திரத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. இப்போது பட்டாவில் உள்ள காண்டியார் என்பவர் யார், அவரின் தந்தை பெயர் என்ன? கிரயம் பெற்ற டாரூசுக்கும், காண்டியாருக்கும் என்ன உறவு, என கேள்வி எழுப்பினார்.அடுத்து கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நடந்த கூட்டத்தில், அவர்கள் தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்துக்கள் தரப்பில் இந்து கோவில் தான் என்பதற்கும், அதில் தங்களுக்கு உள்ள உரிமைக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றார்.பங்கு குரு ஜோசப் ஆல்பர்ட் பேசுகையில், காண்டியார் என்பது பிரெஞ்ச் பெயர், செஞ்சி செயின்ட் மிக்கேல் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர். இவரது கல்லறை சர்ச்சின் பின்புறம் உள்ளது.

காண்டியாருக்கு கொடுத்த பட்டாவை ரத்து செய்யக் கோரி 2000வது ஆண்டு, செஞ்சி கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டில் 250 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போலீசார் நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் சொத்தில் பிரவேசித்தவர்களை தடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சமாதானக் கூட்டம் தேவையில்லை. சொத்துக்கான ஆதாரத்தை கொடுத்துள்ளோம். சொத்தை எங்களிடம் ஒப்படையுங்கள். கிரய பத்திரத்தை தவிர வேறு மூலப் பத்திரங்கள் கிடையாது.முதல் கூட்டத்தில் கோவிலுக்கு இடம் ஒதுக்கித் தர அவகாசம் கேட்டோம். இப்போது அதை தரமுடியாது. வேண்டுமானால் மார்க்கெட் மதிப்பிற்கு கிரயம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.பிறகு உள்ளூர் பிரமுகர்களை கொண்டு நடந்த மூன்றாவது கூட்டத்தில், இரு கூட்டங்களிலும் என்ன கோரிக்கை விடுத்தனர் என்பது குறித்து முழுமையாக அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.

இரண்டாவது கூட்டத்தில், பத்திரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில் அது உண்மையானது என்று தெரிய வந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்தனர். இந்துக்கள் வழிபாட்டிற்கு கோரிக்கை விடுப்பது பற்றி கிறிஸ்தவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்று பொறுப்பை கிறிஸ்தவர்கள் மீது அரசு அதிகாரிகள் திணித்தனர். அவர்கள் தங்களின் பேராயரை கேட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். அதற்காக 10 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அவகாசத்தை வழங்கி 15ம் தேதிக்கு கூட்டத்தை, சப் -கலெக்டர் மஞ்சுளா ஒத்தி வைத்தார்.இரண்டு நாளில் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிப்பதாக கூறித்தான் தாசில்தார், கோவில் சாவியை வாங்கினார். 15ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடத்தாமல் மூடிவைக்க முடியாது. வழிபட்டிற்கும், அபிஷேகம் செய்யவும் கோவிலை திறந்து விட வேண்டும் என, இந்துக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.இது குறித்து கிறிஸ்தவர்கள் கருத்தை கேட்காமல், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சப்- கலெக்டர் மஞ்சுளா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துக்களின் ஒரு பகுதியினர் வெளிநடப்பு செய்தனர்.

செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : கிறிஸ்தவர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த செஞ்சி வக்கீல் பூபதி கூறுகையில், “பீரங்கி மேட்டை சேர்ந்த கணேசன் சார்பாக, கடந்த 2000ம் ஆண்டு இந்து கோவில் உள்ள இடத்தின் பட்டா, கிறிஸ்தவரான காண்டியாருக்கு கொடுத்தது செல்லாது என்று வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கில் கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., காண்டியார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். வழக்கு நடந்த ஐந்து ஆண்டும் எந்த அடிப்படையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்ற தகவலை அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் ஆஜராகவும் இல்லை.காண்டியார் தரப்பில் சம்மனை இறுதிவரை பெறவில்லை. பேப்பரில் விளம்பரம் செய்து எக்ஸ் பார்ட்டியாக வழக்கு முடிய வேண்டிய நிலையில், வழக்கு தொடர்ந்த கணேசன் உடல் நலம் இல்லாமல் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர், வழக்கில் ஆஜராகாமல் போனதால் வழக்கை தள்ளுபடி செய்தனர். வழக்கில் சம்மன் அனுப்பிய தொகையைத்தான் அவரிடம் வசூலிக்க உத்தரவிட்டனர். இது அபராதம் கிடையாது. கிறிஸ்தவர்கள், மயிலம் ஆதினத்திடம் இருந்து 1878ல் கிரயம் பெற்று இருந்தாலும் செஞ்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2000ம் ஆண்டு வரை இதை அனுபவித்ததற்கான ஆதாரம் கிடையாது.

கிரயம் பெற்று இருந்தாலும், கிரயம் பெற்றவர் வேறு, பட்டா பெற்றவர் வேறு. கிரயப்பத்திரத்திலோ, பட்டா ரசீதிலோ கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்று எந்த ஆதாரமும் கிடையாது.கிரையம் வாங்கியவர் தனிப்பட்ட நபர். அவரின் வாரிசுகள் யாரும் இதில் உரிமை கோரவில்லை. சொத்து யாருக்கு என்றும் அவர் எழுதி வைக்கவும் இல்லை.காண்டியார் பெயரில் பட்டா வழங்கி இருந்தாலும் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி எடுக்க வேண்டும். (அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்) அதுவும் நடக்கவில்லை. இந்த சொத்தை, கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை’ என்றார்.

மனதை புண்படுத்துகின்றனர் : கிறிஸ்தவர்கள் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், சமாதான கூட்டத்தில் பேசுகையில், கிறிஸ்தவர்கள் கோவிலை பூட்டியதாக வரும் செய்திகள், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. நாங்கள் பிரச்னைக்கு உரிய இடத்திற்கு சென்ற போது அங்கே சரவணன், வெங்கடேசன் என இருவர் இருந்தனர். கோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. முதல் கூட்டத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்று கூறியிருந்த போது, ஏன் வந்தீர்கள் கோவில் பூட்டையும், சாவியையும் என்னிடம் தாருங்கள் என வாங்கினேன்.இதற்குள் அங்கு வந்தவர்கள் எங்களை மிரட்டினர். அப்போது அங்கு வந்த தாசில்தார், இந்துக்களை விட்டே கோவிலை பூட்டி சாவியை வாங்கினார். நாங்கள் வழிபாட்டை நிறுத்தியதாக கூறுவது தவறு என்றார்.

இந்த பிரச்னை தொடர்பாக இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிவசுப்பிரமணி கூறுகையில்,”இதன் மூலம் இந்துக்களை பணிய வைக்க அரசு முயல்கிறது. எந்த அடிப்படையில் காண்டியார் பெயருக்கு பட்டா வங்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு, அரசிடம் எந்த ஆவணமும் இல்லை என பதில் கொடுத்துள்ளனர். இது குறித்து மேல் முறையீடு செய்ய உள்ளேன்’ என்றார்.

செஞ்சியில் இந்து கோவில்களின் நிலை : நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், போரில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர். இன்றும் சிறப்பான கட்டுமானத்துடன் காணப்படும் செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவிலை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த கோவில்களில் மீதமிருக்கும் மண்டபங்கள், கோபுரங்கள், இதில் உள்ள சிற்பங்களும், பாரம்பரியத்தின் மீதும், கலையின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் வருத்தமடையச் செய்யும். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கோவில்களை கட்டுவதற்கு முன், பழமையான கோவில்களை பராமரிப்பதும், அழிவில் இருந்து தடுப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நமது சிறப்பு நிருபர்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: