வீரசோழபுரம், கோவில்கள், சிலைகள், நிலங்கள்: தமிழக அரசு என்ன செய்கிறது? கோவில் சொத்துப் பிரச்சினைகள் நீதிமன்றங்களுக்கு செல்வதேன்?

வீரசோழபுரத்தில் திராவிட அரசு பழைய யுக்தியைத் தான் பயன்படுத்தியுள்ளது: திராவிட அரசு, வீரசோழபுரம் கோவில் நிலத்தை, சட்டத்தை வளைத்து அபகரித்தது, கடந்த 70 ஆண்டுகளில் உபயோகப் படுத்தப் பட்டு வரும் யுக்தி-திட்டமே. இதில், புதியதாக ஒன்றும் இல்லை. அறநிலையத் துறை, தமிழக அரசின் யாதாவது ஒரு துறைக்கு குத்தகைக்கு விடுவது, விற்பது, பிறகு அத்துறை தனதாக்கிக் கொண்டு, கோவில்களை ஏமாற்றுவது என்று தான் நடந்து வருகிறது. இது தான் இங்கும் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான, ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். ஆனால் அப்போது இந்த பணியில் ஈடுபட்டவர் இறந்ததால், ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையாமல் போனது. வரலாற்று சிறப்பு மிக்க அர்த்தநாரீஸ்வரர் கோவில் கடந்த 200 ஆண்டுகளாக புனரமைக்கப்படாமலும், குடமுழுக்கு நடத்தப்படாமலும் கோவில் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலம் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. ஏற்கெனவே இக்கோவிலிலிருந்து, சிலைகள் மாயமாது குறித்து, 2018லேயே புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

சிதிலமடைந்த வீரசோழியம் கோவில்களில் சிலைகள் கொள்ளை: இக்கோவிலில் இருந்த முருகன் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது[1]. இதையடுத்து இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிலைகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவிலில் உள்ள 12 ஐம்பொன் சிலைகள் மற்றும் அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகளை கெங்கையம்மன் கோவிலில் வைத்து பாதுகாத்து வந்தனர்[2]. இந்நிலையில் இந்த சிலைகளை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவின் பேரில் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் கெங்கையம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 17 ஐம்பொன் சிலைகளையும், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து, அங்கு பாதுகாப்பாக வைத்தனர். 2016ல் அறநிலையத் துறை ஆய்வாளர் சரவணன், ஆய்வு செய்தார்[3]. வரதராஜ பெருமாள் கோவிலில், சந்தான கோபாலகிருஷ்ணன் ஐம்பொன் சிலை காணாமல் போனது பற்றி, தியாகதுருகம் போலீஸில் புகார் கொடுத்தார்[4].

நாளிதழ்களில் விளம்பரம், 19-09-2020 அன்று ஆணை பிறப்பிக்கப் பட்டது, 23-10-2020 அன்று அடிக்கல் நாட்டப் பட்டது: கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் அமைந்துள்ளது, அர்த்தநாரீஸ்வரர் கோவில். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை, சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர்[5]. இக்கோவிலுக்கு சொந்தமாக, வீரசோழபுரத்தில், 70 ஏக்கர் நிலமும், வி.பாளையம் கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் உள்ளன. கோவில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம், கோவில் பூஜைகள் செய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமான பின், ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் கட்ட, பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வீரசோழபுரத்தில் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் புன்செய் நிலமும் அடங்கும். அந்த நிலத்தினை, வருவாய் துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசாணை, செப்., 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதற்கான விளம்பரம், அறநிலைய துறையால் வெளியிடப்பட்டது. இம்மாதம், 23ம் தேதி, கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.இதற்கு, ஆன்மிக நல விரும்பிகள், பக்தர்கள், உள்ளூர் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முதலில் மக்கள் ஆர்பாட்டம், புகார்: கோவிலுக்கு சொந்தமான, 35 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு தேர்ந்தெடுத்து, கையகப்படுத்தியது[6]. இதையடுத்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது[7]. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு குறைவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வீரசோழபுரத்தைச் சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது குறிப்பிட்ட 35 ஏக்கர் நிலத்துக்கு சந்தை மதிப்பு ரூ.29 கோடியே 17 லட்சம் என அறநிலையத்துறை கூறி உள்ளது. ஆனால் மாவட்ட கலெக்டரின் மதிப்பீட்டில் ரூ.1 கோடியே 98 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில் நிலம் விற்பனையில் ஏதேனும் கருத்து, மறுப்பு தெரிவிப்பதாக இருந்தால் வருகிற 29-ந்தேதிக்குள் (29-11-2020) சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அவசர அவசரமாக கடந்த 23-ந் தேதி கலெக்டர் அலுவலக கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. வருவாய் துறைக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அரசின் முடிவுக்கு, ஆன்மிகவாதிகள், ஊர் மக்கள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்[8].

நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளி வைப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்தார்[9]. இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோவில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துக் கேட்புக் கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது[10]. மேலும், 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு 1.98 கோடி ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மனுதாரர் தரப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்[11]. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்துக் கேட்புக் கூட்டத்தின் அடிப்படையில் கோவில் நிலத்தை அரசுக்குச் சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு நிலத்தை வழங்க தற்போது அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும், பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது[12]. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 9ம் தேதிக்குள் / ஜனவரி 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்[13]. அதுவரை ஆட்சியர் அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவிட்டனர்[14].

70 ஆண்டு சட்ட முன்மாதிரி தீர்ப்புகளை மீறி, நீதிபதிகள் புதிய தீர்ப்புகள் கொடுக்க முடியுமா?: 19-09-2020 – தமிழக அரசு ஆணை பிறப்பித்து, கோவில் நிலத்தை கையகப் படுத்திக்கொண்டது.
23-10-2020 – முதலமைச்சர், கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது.
29-10-2020 – அறநிலையத் துறை கூட்டம் கூட்டியது.
2-12-2020 – நீதிமன்றம் கட்டிட வேலையை நிறுத்தி, பதில் சொல்ல ஆணையிட்டது. விசாரணையைத் தள்ளி வைத்தது.
வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும் நிலையில், அரசு கோவில் நிலத்தை விற்கும் சட்டமீறல்கள், வளைப்புகள் முதலியவை நாளடைவில், சரிபடுத்தப் பட்டு விடும் போலிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, நீதிபதிகள் பற்பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே உள்ள சட்ட முன்மாதிரியான தீர்ப்புகளுக்கு உட்பட்டுதான், இவர்கள் தீர்ப்புகள் கொடுக்கப் போகிறார்கள். அதாவது, அவை அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஆக, இத்தீர்ப்புகளை எதிர்த்து, மறு-ஆய்வு, பரிசீலினை என்றோ, உச்சநீதி மன்றம் வரை, செல்வதற்கு வாதிகள் தயாராக உள்ளனரா என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
17-12-2020

[1] தினத்தந்தி, வீரசோழபுரம் கோவில்களில் இருந்த 17 ஐம்பொன் சிலைகள் விழுப்புரம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன, ஜூலை 01, 2018, 03:15 AM
[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/07/01014702/Vimasolapuram-temples-were-the-fifty-statuesVillupuram.vpf
[3] தினமலர், சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு, Added : மே 23, 2018 01:04
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2026307
[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2642621
[6] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட கோவில் நிலத்துக்கு கூடுதல் மதிப்பீடு வழங்க வேண்டும் – கிராம மக்கள் கோரிக்கை, பதிவு: அக்டோபர் 29, 2020 18:15 PM மாற்றம்: அக்டோபர் 29, 2020 19:11 PM.
[7] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/10/29191151/Kallakurichi-collectors-office-building-To-the-acquired.vpf
[8] தினமலர், கோவில் நிலம் விவகாரம்: அரசு முடிவுக்கு ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு, Updated : அக் 30, 2020 00:33 | Added : அக் 29, 2020 23:17.
[9] நியூஸ்.18.தமிழ், கள்ளக்குறிச்சி: கோவில் நிலத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை, NEWS18 TAMIL, LAST UPDATED: NOVEMBER 27, 2020, 7:15 PM IST
[10] https://tamil.news18.com/news/tamil-nadu/kallakurichi-chennai-hc-restricts-construction-of-new-collector-office-on-temple-land-riz-md-374475.html
[11] தமிழ்.இந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்: பணிகளை நிறுத்தி வைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 27 Nov 2020 04:01 PM Last Updated : 27 Nov 2020 04:01 PM.
[12] https://www.hindutamil.in/news/tamilnadu/605816-highcourt-order-on-kallakurichi-collectorate-office.html
[13] நக்கீரன், கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!, அதிதேஜா, Published on 16/12/2020 (08:34) | Edited on 16/12/2020 (09:03)
[14] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/temple-land-district-collector-office-chennai-high-court-tn-govt