Archive for the ‘அரண்மனை’ Category

தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கம் திருட்டு

ஏப்ரல்22, 2013

தஞ்சை அரண்மனையில் மரகத லிங்கம் திருட்டு

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில்,இரண்டாம் சரபோஜி நினைவரங்கில், சதர் மகால் உள்ளது. இந்த மகாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருட்கள்,ஆபரணங்கள் உள்ளிட்டவை, சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக, கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மகாலில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், நாள்தோறும், காலையிலும்,மாலையிலும் கணக்கெடுக்கப்படும்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை, நினைவரங்க நிர்வாக அறங்காவலர், சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார். அப்போது, மூன்று கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த, ஓர் அங்குல உயரமுடைய மரகத லிங்கம், மூன்று அங்குல உயரம் கொண்ட ஸ்படிகலிங்கம்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட, கால் அடி உயர முடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என, பல வகையான பொருட்களை காணவில்லை. இவை, பழங்காலத்து பொருட்கள் என்பதால்,விலை மதிப்பிடமுடியாதவை.

தஞ்சாவூர் அரண்மனையில் விலை மதிக்க முடியாத பழங்காலப் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இரண்டாம் சரபோஜி நினைவரங்கத்தில் சதர் மஹால் உள்ளது. இந்த மஹாலில் மராட்டிய மன்னர்கள் பயன்படுத்திய ஆடைகள், சீன பீங்கான் பொருள்கள், தந்தத்தால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வைக்காகக் கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மஹாலில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் கணக்கெடுக்கப்படும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் நினைவரங்க நிர்வாக அறங்காவலர் சிவாஜி ராஜா பான்ஸ்லே கணக்கு எடுத்தார்.

அப்போது, மூன்று கண்ணாடி பெட்டிகளில் இருந்த ஒரு அங்குல உயரமுடைய மரகதலிங்கம், 3 அங்குல உயரம் கொண்ட ஸ்படிக லிங்கம், யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 அடி உயரம் கொண்ட கிருஷ்ணன் சிலை, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால் அடி உயரமுடைய சிறிய யானை சிலைகள், யாழிமுகம் கொண்ட கத்திகள், சீப்பு என 14 வகையான பொருள்களைக் காணவில்லையாம்.

இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நினைவரங்கத்தில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், மின்சாரம் இருந்தால்தான் அவை பதிவாகுமாம். எனவே, மின் வெட்டு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பொருள்கள் இருந்ததாகக் கூறப்படும் கண்ணாடிப் பெட்டிகள் உடைக்கப்படாமல் இருந்தன. எனவே, இதுதொடர்பாக நன்கு விஷயம் தெரிந்த ஆள்கள்தான் திருடிச் சென்றிருக்க முடியும் எனப் போலீஸார் கருதுகின்றனர்.

இதனிடையே, சம்பவ இடத்தில் விரல்ரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால், இவற்றில் உறுதிப்படுத்தும் விதமான தடயங்கள் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவாஜி ராஜா பான்ஸ்லே தெரிவித்தது:

தஞ்சை சரபோஜி நினைவரங்கம் பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படும். நினைவரங்கம் திறக்கும் போதும், மூடும் போதும் அங்குள்ள பொருள்கள் கணக்கெடுக்கப்படும்.

அதுபோல் வெள்ளிக்கிழமை மாலை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, 14 வகையான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.  இவை, பழங்காலத்து பொருள்கள் என்பதால் விலை மதிப்பிட முடியாதவை என்றார் அவர்.